திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கோனாபுரம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 52). இவர் தச்சு தொழிலாளி. தாராபுரம்-வாய்க்கால் மேடு பகுதியில் இருந்து கிளாசிக் போலோ புறவழி சாலையை கடக்க முயன்ற போது மதுரையிலிருந்து கோவை நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதம் தண்டபாணியின் மீது வேகமாக வந்து மோதியது. இந்த விபத்தில் தண்டபாணி தலை நசுங்கி, மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் உசிலம்பட்டியை சேர்ந்த குபேந்திரனிடம் (38) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுவதால் அப்பகுதியில் திறந்துவிடப்பட்டுள்ள தடுப்புச் சுவர் பகுதிகளை அடைக்குமாறும் மேலும் அப்பகுதியில் எச்சரிக்கை மணி மற்றும் சிக்னல் மின்விளக்குகள் பொருத்துமாறும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.