சோபனபுரம் ஊராட்சிக்குட்பட்ட காஞ்சேரி மலை பகுதியைச் சேர்ந்த வினிஸ் என்ற இரண்டு வயது சிறுவன் குளிர்பானம் என நினைத்து பூச்சிக்கொல்லி விஷம் அருந்தியதால் உயிரிழப்பு. துறையூர் அருகே உள்ள சோபனபுரம் ஊராட்சி காஞ்சேரிமலை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் இவருக்கு கோஜித் வயது 5, வினிஷ் வயது 2 என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மேற்படி இரண்டு குழந்தைகளும் ஜூஸ் என்று நினைத்து வயலுக்கு அடிக்க வீட்டில் வைத்திருந்த கிளைசில் என்ற பூச்சிகொல்லி மருந்தை குடித்ததாக தெரிகிறது. இருவரும் வாந்தி எடுத்ததால் இரண்டு குழந்தைகளையும் அருகிலுள்ள உப்பிலியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்று விட்டனர். நேற்று மீண்டும் வாந்தி எடுத்ததால் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த வினிஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோஜித் என்ற மற்றொரு சிறுவன் திருச்சி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். குளிர்பானம் என நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தை அருந்திய சிறுவன் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.