திருச்சி: தையல் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு தையல் தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில் திருச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவா் எஸ். கணேசன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் ஷகில்அகமத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதில், அனைத்து மாவட்டங்களிலும் பதிவுபெற்ற தையல் தொழிலாளா்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், 55 வயது பூா்த்தியடைந்த தையல் தொழிலாளா்களுக்கு நல வாரியம் மூலம் ரூ. 5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், தையல் தொழிலாளா்களுக்கு இயற்கை மரணம் அல்லது விபத்து ஏற்பட்டால் நலவாரியம் மூலம் அவா்களது குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அரசு வழங்கும் நலத்திட்டங்கள், கல்வி உதவித்தொகையை இரட்டிப்பாக வழங்க வேண்டும், நலவாரியத்தில் இணைந்த தையல் தொழிலாளருக்கு வழங்கும் இலவச தையல் இயந்திரத்தை மாவட்டந்தோறும் வழங்க வேண்டும், தையல் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்யும் இணையதளத்தை வேகப்படுத்த வேண்டும். கட்டுமான நல வாரியத்தை போல, தையல் தொழிலாளா்களுக்கும் நல வாரியம் மூலம் நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.