திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது இந்த ஆண்டு நாளை டிச. 31 ஆம் தேதி முதல் ஜன.09 ஆம் தேதி வரை பகல் பத்து திருவிழாவாகவும் ஜன. 11 ஆம் தேதி முதல் ஜன. 20 ஆம் தேதி வரை இராப்பத்து திருவிழாவாகவும் நடைபெறுகிறது.
21 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் (சொர்க்கவாசல்) வருகின்ற ஜன. 10 ஆம் தேதி அதிகாலை 5:15 மணிக்கு திறக்கப்படவுள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்த வைகுண்த ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிக்காக ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் ரெங்கவிலாஸ் மண்டபம் அருகில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.
இந்த புறக்காவல் நிலையத்தை நேற்று மாலை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திறந்து வைத்து, செய்தியாளர்களிடம் கூறும்போது: -கடந்த வருடம் சுமார் 2.5 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிந்தார்கள். இந்த வருடம் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வைகுண்த ஏகாதசி விழாவிற்கு போதுமான பாதுகாப்பு அளிப்பதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் சுமார் 2500 பேர் பாதுகாப்பு பணிக்கு பணியமர்த்தப்பட உள்ளார்கள் என்றார்.