சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜி முன்னிலையில், பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தை தரம் பிரித்து அளவீடு செய்யும் பணி துவங்கியது.
சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாகவும், காணிக்கையாகவும் வரப்பெற்ற மொத்தம் 365 கிலோ தங்க நகைகள், கோயில் உபயோகத்திற்கு தேவையில்லாத கல், அரக்கு, அழுக்கு போன்றவற்றை நீக்கி நிகர தங்கங்களை தரம் பிரித்து எடை போடும் பணி தற்போது ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ராஜு தலைமையில் நடந்தது. இதில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரவீந்திர பாபு மாலா முன்னிலையில்
கோயில் அலுவலக வளாகத்தில் இன்று(செப்.9) துவங்கியது.
மூன்று மண்டல செயல் அலுவலர்கள், சமயபுரம் கோயில் அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் முன்னிலையில் 25க்கும் மேற்பட்ட பொற்கொல்லர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசு ஆணை கிடைத்தவுடன், தங்கங்கள் அனைத்தும் பாரத ஸ்டேட் வங்கி மூலம், மும்பை அரசு உருக்காலைக்கு கொண்டு சென்று உருக்கப்பட்டு, ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதற்கான தங்க பத்திரங்களை ரிசர்வ் வங்கி கோயிலுக்கு வழங்கும். இதிலிருந்து கிடைக்கும் வட்டி, கோயில் வருவாயில் சேர்க்கப்படும் என நீதிபதி ராஜூ தெரிவித்தார். தங்கம் எடை போடும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.