கர்நாடகா அரசு தமிழகத்திற்கு மாதாமாதம் திறக்கவேண்டிய தண்ணீரை திறக்க மறுப்பதால், கர்நாடகா அரசிடம் இருந்து உச்ச நீதிமன்றம் 1 இலட்சம் கோடி இழப்பீடு பெற்று தமிழக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் எனவும், காவிரி- கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக் கோரியும், மத்திய அரசு கொண்டு வந்த மூன்று குற்றவியல் சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரி நடைபெறும் வழக்கறிஞர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்துவதற்காக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து டெல்லி நோக்கி பயணம் மேற்கொண்டனர். சென்னையில் இருந்து ரயில் மூலம் டெல்லி புறப்பட்டு சென்ற விவசாயிகளை, மத்திய பிரதேசத்தில் வைத்து மாநில காவல் துறையினர் தடுத்து அவர்களை கீழே இறக்கி, காவலில் வைத்து பின்னர் அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று குருவாயூர் எக்ஸ்பிரஸ் மூலமாக திருச்சி ரயில் நிலையம் வந்து இறங்கி, அங்கிருக்கும் ரயில்வே டி. ஆர். எம் அலுவலகத்திற்கு சென்று பயணத்தொகை முழுவதையும் திருப்பி கொடுக்க வலியுறுத்தி ரயில்வே கோட்ட மேலாளரிடம் முறையிட முயன்றனர் அவர்களை போலீசார் தடித்த நிறுத்தினர்.