மணப்பாறையை அடுத்த பண்ணப்பட்டி அருகே பின்னத்தூரில் மாரியம்மன் மற்றும் கலுவடியான் கோவிலில் கடந்த 4ந் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியான அருள் வந்து பூசாரி கழுமரத்தின் மீது ஏறி குறிப்பிட்ட தூரத்தில் நின்று சாமி அழைக்கும் நிகழ்வும் அதனைத்தொடர்ந்து கழுகுமரம் இருந்த இடத்தின் கீழ் இரு சிறுவர்களை தரையில் படுக்கவைத்து இறந்த உடலுக்கு செய்வது போல் அவர்களது கை, கால்களைக்கட்டி வேட்டியால் உடலை மூடி மாலை அணிவித்து தாரை தப்பட்டை முழங்க இறந்தவருக்கு செய்யும் சடங்குகளை செய்கின்றனர். இதேபோல் கழுகுமரத்தின் சற்று தொலைவில் ஒரு குழியில் உயிருடன் உள்ள ஒருவரை சடலம் போல் படுக்க வைத்து பச்சை தென்னை ஓலையால் மூடிவிட்டு அவரது உறவினர்கள் பொதுமக்களிடம் மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்நிலையில் கழுகுமரத்தில் உள்ள பூசாரி அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஊர் பெரியவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கழுகுமரத்தில் இருந்து அருள்வாக்கு கூறினார். இதன் பின்னர் கழுமரத்தின் கீழே சடலமாக கிடத்தப்பட்ட சிறுவர்களை உயிர்பிக்கும் நிகழ்வும் தொடர்ந்து ஆடு பலியிட்டு அதன் குடலை எடுத்து அதனை மாலையாக கட்டி குழிக்குள் சடலமாக படுக்க வைக்கப்பட்டவரை எழுப்பி குடல் மாலையை அவருக்கு அணிவித்து பின்னர் அங்கிருந்து கரும்புடையார் பாறை என்ற இடத்திற்கு சாமி செல்லும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.