திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, அப்பணநல்லூரில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை வகித்து 628 பயனாளிகளுக்கு 93 லட்சத்து 14 ஆயிரத்து 350 மதிப்பீட்டில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அவர் பேசும்போது,
அனைத்து மக்களும் அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டும் என்பதற்காக இந்த சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மக்களுக்கான பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். துறை ரீதியாக செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் குறித்து மக்கள் பயனடைகிற வகையில் உரிய துறை அலுவலர்கள் மக்களிடம் எடுத்துக் கூறியும், மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று அதன் மீது உடனடி தீர்வு கண்டும், நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் வகையில் இந்த முகாம் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் அரசின் திட்டங்களை அறிந்து அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பேசினார்.
அப்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, ஊரக வாழ்வாதார இயக்கம், வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.