திருச்செந்தூரில் கனிமொழி கருணாநிதி எம். பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலையொட்டி உள்ள கடற்கரை தொடர்ந்து காலநிலை மாற்றத்தால் அரிப்பு ஏற்பட்டு பக்தர்கள் நீராட முடியாத நிலை உள்ளது. கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு தொடர்ந்து கடல் அரிப்பு பாதிப்பு ஏற்படுவது ஒரு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கடற்கரை குறைந்து கொண்டே வருகிறது. அதை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக வந்துள்ளோம். இதற்கு நிரந்தரமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கு முன்பாக கடற்கரை அரிப்பை தடுக்க ஐ.ஐ.டி. நிபுணர்கள் மற்றும் சிறந்த வல்லுநர்கள் மூலமாக ஆய்வு செய்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு நிரந்தரமான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்