திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா 7ஆம் திருவிழாவில் சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா நடைபெற்றது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 14ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மாலை நேரத்தில் சுவாமி பல்வேறு வாகனம் மற்றும் சப்பரத்தில் பணி நடைபெற்று வருகிறது.
7-ம் திருவிழாவான இன்று 20-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1. 30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும், 4. 30 மணிக்கு உருகு சட்டசேவை, காலை 8. 45 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளி ஏற்றத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு வந்து அங்கு சுவாமி ஜெயந்தி நாதருக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.
மாலை 4. 30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான (23-ந்தேதி) தேரோட்டம் நடக்கிறது. 11-ம் திருநாளான (24-ந்தேதி) தெப்பத்திருவிழா நடக்கிறது.