தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள லிங்கம்பட்டியில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் அனைத்து அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு முகாமில் கலந்து கொண்டு பட்டா பெயர் மாற்றம், மின்வாரியத்த்தில் பெயர் மாற்ற ஆணைகளை வழங்கி பேசுகையில் முதல்வர் தனிபிரிவுக்கு வரும் மனுக்கள் மீது தீர்வு காண தனிதுறையை ஏற்படுத்தியவர் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், அதன் அடிப்படையில் இந்த மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பட்டா பெயர் மாற்றம், புதிய பட்டா வழங்குதல், இலவச வீட்டுமனைபட்டா வழங்குதல் என பல்வேறு அரசு துறைகளில் மக்களுக்கு செயல்படுத்தும் திட்டங்கள் எளிதில் சென்றடையும் சூழ்நிலை உள்ளது.
முகாமில் கால்களை இழந்த மாற்றுத்திறனாளி திவாகர் என்பவர் மாற்றுத்திறனாளிக்கான மின்மோட்டார் வாகனம், மாற்றுத்திறனாளிக்கான உதவி தொகை மற்றும் செயற்கை கால் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவனிடம் மனு அளித்து முறையிட்டார். மனுவினை பெற்றுக்கொண்ட அமைச்சர் கீதாஜீவன் மாத உதவி தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமின்றி மின்மோட்டர் வாகனம் (பைக்) வழங்கப்படும், செயற்கைகால் பொறுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.