கோவில்பட்டியில் மூன்று நாட்கள் நடைபெற்ற அகில இந்திய அளவிலான யோகாசன போட்டி - ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற தமிழ்நாடு அணி - பரிசு வழங்கிய அமைச்சர் கீதா ஜீவன்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரி ஆடிட்டோரியத்தில் தமிழ்நாடு ஹதா யோகா அசோசியேசன், இந்தியன் ஹதா யோக் பெடரேஷன் சார்பில், ’3வது அகில இந்திய யோகாசன ஸ்போர்ட்ஸ் சாம்பியன் ஷிப் 2023’ போட்டி கடந்த 6ந்தேதி தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில்குஜராத், ராஜஸ்தான், உத்தரகாண்ட், சதீஸ்கர், கர்நாடகா, ஒரிஷா உள்ளிட்ட 15 மாநிலங்களிலில் இருந்து 250க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவு ஆண், பெண் என்று தனித்தனிப் போட்டிகள் மற்றும் குழு போட்டிகள் நடைபெற்றது. தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் சிறப்பாக அசத்தி தமிழ் நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 2வது இடத்தினை சதீஷ்கர் மாநில அணி வெற்றி பெற்றது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, யோகா சங்க நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டனர்.