நந்தம்பாக்கம் மவுன்ட் -- பூந்தமல்லி நெடுஞ்சாலையில், குடிநீர் வாரிய பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை முறையாக சீரமைக்காததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிக துாசி பறப்பதால், வாகன ஓட்டிகள் கண் எரிச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். ஆலந்துார் மண்டலம், நந்தம்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக மவுன்ட் -- பூந்தமல்லி நெடுஞ்சாலை நடுவே, இரவு நேரத்தில் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக நந்தம்பாக்கம், வர்த்தக மையம் எதிரே, குடிநீர் வாரியம் சார்பில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான குழாய் பதிக்கப்பட்டது. இப்பணிகள் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகின்றன.
அதற்காக தோண்டிய பள்ளம் முறையாக மூடப்படவில்லை. அந்த பள்ளத்தில் கொட்டப்பட்ட ஜல்லி கற்கள் பெயர்ந்து, சாலையில் சிதறியுள்ளன.
அத்துடன், சாலை வெட்டு மேற்கொண்ட பகுதிகள், ஆங்காங்கே உள்வாங்கி பள்ளமாக மாறி உள்ளன. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தற்போது பெய்து வரும் மழையில், சாலை சேறும் சகதியுமாக மாறுவதுடன், வெயில் நேரத்தில் துாசி பறந்து இருசக்கர வாகன ஓட்டிகள் கண் எரிச்சலால் அவதிப்படுகின்றனர்.
மேலும், மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடப்பதால் சாலை குறுகி, இந்த நெரிசலால் தினசரி வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.