ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழ்கிறது திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில். இந்த திருக்கோயிலில் முருகப்பெருமானுக்கு உகந்த இந்த ஆடி மாதத்தில் நடைபெற்ற திருவிழா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் காவடி எடுத்து வந்து மலைக் கோயிலில் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக எடுத்து வந்த பணம் மற்றும் தங்கம் ஆகியவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
அதனையடுத்து கடந்த 18 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை திருத்தணி முருகன் கோயிலில் மலைக்கோவிலி்ன் வசந்த மண்டபத்தில் திருக்கோயில் இணை ஆணையர், செயல் அலுவலர் ரமணி முன்னிலையில் திருக்கோயில் ஊழியர்கள், திருக்கோயில் தற்காலிக பணியாளர்கள், தன்னார்வலர்கள், ஆகிய 200க்கும் மேற்பட்டோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியினை மேற்கொண்டனர்.
அதன்படி உண்டியல் காணிக்கையாக ரூ. 1 கோடியே 7 லட்சத்து 66 ஆயிரத்து 917 ரொக்கமும், திருப்பணிக்காக 3 லட்சத்து 3 ஆயிரத்து 615 ரூபாய் என மொத்தம் ரூ. 1 கோடியே 10 லட்சத்து 70 ஆயிரத்து 532 ரொக்கமும், 332 கிராம் தங்கம், 11615 கிராம் வெள்ளியும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியதாக திருக்கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.