திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வட்டாட்சியர் மலர்விழி தலைமையில் மழைக்காலங்களில் மற்றும் பேரிடர் காலங்களில் எவ்வாறு தற்காத்து கொள்வது என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக ஒத்திகை நடத்தினர். திருத்தணி தீயணைப்பு படை வீரர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஒத்திகையை நிகழ்த்தினர். மழைக் காலங்களில் வெள்ளம் ஏற்பட்டால் எப்படி செயல்பட வேண்டும்? வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தற்காத்து கொள்வது எப்படி? மழைக்காலங்களில் மின்சார விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை நடத்தினர். மழைக்காலங்களில் நீர்நிலையில் தவறி விழுந்தவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கங்களை அளித்தனர்.