அறுபடைவீடு ஐந்தாம் படை வீடான திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா (27-07-2024 முதல் 31-07-2024 வரை), ஆடி அஸ்வினியுடன் விழா துவங்கியது. அதிகாலை, 4: 30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை மாணிக்கல், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை 6: 00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன், மலைப் படிகள் வழியாக சரவணபொய்கை திருக்குளத்திற்கு வந்து மூன்று முறை குளத்தை சுற்றி வலம் வந்தார். தொடர்ந்து, மலைக்கோவிலுக்கு உற்சவர் சென்றபின், மூலவருக்கு மீண்டும் சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.
ஆடி கிருத்திகை தெப்ப திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்வார்கள். வந்து செல்ல பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குடிநீர், தற்காலிக கழிவறை, அவசர சிகிச்சைக்காக மருத்துவ முகாம் போன்றவற்றை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.