திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது. பொன்னேரியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனை இருளில் மூழ்கியது.
புதிய கட்டிடம் அமைந்துள்ள அவசர சிகிச்சை பிரிவினைத் தவிர பழைய கட்டிடம் அமைந்துள்ள பிரசவ அறை, உள்நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அறைகளில்
மின்வெட்டு காரணமாக மின்சாரம் இல்லாமல் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள் நோயாளிகள் அவதியுற்றனர். மின்வெட்டு ஏற்படும் நேரங்களில் குழந்தை கடத்தல், சமூக விரோதிகளால் ஏற்படும் அச்சம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ள நிலையில் போதிய வெளிச்சம் மற்றும் மின் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் சுகாதார துறையை வலியுறுத்தியுள்ளனர். மேலும் 2வது நாளாக இன்று பெய்த மழையின் காரணமாக மீண்டும் மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். ஜெனரேட்டர்கள் இருந்தும் இயங்காததால் மின்சாரம் வழங்கப்படவில்லை. மருத்துவமனை நிர்வாகம் உரிய முறையில் ஜெனரேட்டரை இயக்கி கர்ப்பிணி தாய்மார்கள் பச்சிளம் குழந்தைகள் நோயாளிகளுக்கு மின்சார வசதியை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்