மதுரவாயலில் செய்தியாளர்களை சந்தித்த லண்டன் வாழ் தமிழரான ராதிகா, தங்கள் குழுவினர் தஞ்சை பெரிய கோயிலில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
லண்டன் வாழ் தமிழர்களான பாட்டுக்கு பாட்டு புகழ் ராதிகா மற்றும் தீபா ஆகியோர் இணைந்து ரித்திய சங்கீத அகாடமி எனும் நடன மற்றும் இசைப் பள்ளியை நடத்தி வருகின்றனர். இந்த அகாடமியின் சார்பில் வரும் ஜூலை 31ஆம் தேதி தஞ்சை பெரிய கோயிலில் தமிழக பாரம்பரிய நடனமான பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மூன்றாம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பரதநாட்டிய நிகழ்ச்சியை இந்த குழுவினர் நடத்த உள்ளனர்.
இதற்காக லண்டனிலிருந்து 52 பரதநாட்டிய நடன மாணவர்களை அவர்கள் அழைத்து வந்துள்ளனர். இந்த 52 பேரும் லண்டன் மற்றும் அதன் அருகே உள்ள மாகாணங்களை சேர்ந்த பூர்வீக தமிழர்கள் ஆவார்கள். இவர்களின் மூலம் தஞ்சை பெரிய கோயில் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பரதநாட்டிய நிகழ்ச்சியை நடத்துவது மட்டுமின்றி, பரதநாட்டிய கலையை மற்ற லண்டன் வாழ் தமிழர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதே தங்கள் நோக்கம் என ரித்திய சங்கீத அகாடமியை சேர்ந்த ராதிகா தெரிவித்தார். இது தொடர்பாக மதுரவாயலில் செய்தியாளர்களை சந்தித்த ராதிகா, இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய தமிழக அரசும் அதிகாரிகளும் உரிய வகையில் இதற்கு அனுமதி அளித்ததாகவும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.