ஆவடி அடுத்த அரக்கம்பாக்கத்தைச் சேர்ந்த நடராஜன், 47, என்பவர், ஆவடி மத்திய குற்றப் பிரிவில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: நான் வார்ன் டிரேடிங் கம்பெனி' என்ற பெயரில் விவசாய பொருட்கள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறேன்.
எனக்கு, மும்பையில் 'கரீஷ்மா இன்டர்நேஷனல் எக்சிம்' என்ற ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வரும் சந்தீப் பவர் மற்றும் மலேஷியாவில் 'கரீஷ்மா எஸ்சிம்' என்ற ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் நடத்தி வரும் பாலாசிங் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் என்னிடம் ரோஸ் வெங்காயம், சாம்பார் வெங்காயத்தை வாங்கி, மலேஷியாவுக்கு ஏற்றுமதி செய்தனர். கடந்த 2020 முதல், வெங்காயம் ஏற்றுமதி செய்ததற்காக எனக்கு தர வேண்டிய, 50. 06 லட்சம் ரூபாயை தராமல் ஏமாற்றினர். மோசடியில் ஈடுபட்ட இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் பவர், 35, என்பவருக்கு 'லுக் அவுட் நோட்டீஸ்' வழங்கினர். தொடர்ந்து, மும்பை விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி, சந்தீப் பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பாலாசிங்கை தேடி வருகின்றனர்.