கோயம்புத்துாரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 50; கொத்தனார். திருவேற்காடில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த மகளை அழைத்து செல்ல, மணிகண்டன் நேற்று முன்தினம் ஆவடி ரயில் நிலையம் வந்துள்ளார்.
உறவினரின் 17 வயது மகன், மணிகண்டனை பைக்கில் ஏற்றிக்கொண்டு, ஆவடியில் இருந்து திருவேற்காடு நோக்கி சென்றார்.
ஆவடி பருத்திப்பட்டு அருகே சென்றபோது, சாலையோரத்தில் கொட்டப்பட்டு இருந்த ஜல்லியில் பைக் இடறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது, பூந்தமல்லி நோக்கி சென்ற தடம் எண்: 62 அரசு பேருந்து, மணிகண்டன் மீது ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிர்ஷ்டவசமாக சிறுவன் உயிர் தப்பினார்.
விபத்துக்கு காரணமான, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனரான லக்ஷ்மணன், 47, மற்றும் சிறுவனிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.