அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் - இனி இத பண்ணாதீங்க!

27355பார்த்தது
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் - இனி இத பண்ணாதீங்க!
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், மக்களவைத் தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை இன்று (16.03.2024) வெளியிட்டார். அதன்படி 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடக்கவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல்19 அன்று நடக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதே நாளில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார். அந்த தேர்தல் விதிமுறைகள் என்ன என்பதை கீழே காணலாம். ஒருவரை மத ரீதியாகவோ, தனிப்பட்ட முறையிலோ விமர்சிக்க கூடாது. மக்களை பிளவுப் படுத்தும் விஷயங்களை பேசக்கூடாது. சமூக வலைதளங்களில் அரசியல் கட்சியினர் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அரசியல் கட்சியினரின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பரப்புரையின்போது கண்ணியத்துடன் பேச வேண்டும். தேர்தல் பரப்புரையில் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை பயன்படுத்தக் கூடாது. கோயில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் மற்றும் மதம் சார்ந்த இடங்களை தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தக்கூடாது. தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது. தேவையற்ற வதந்திகளை பரப்பினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பரிசு வழங்குவது தேர்தல் நடத்தை விதிப்படி குற்றமாகும். அவ்வாறு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல வாக்காளர்களை குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது. ஒரு கட்சி அல்லது வேட்பாளர் பொதுக்கூட்டம் நடத்துவது பற்றி முன்கூட்டியே காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கு முன் அனுமதி பெறுவது கட்டாயம். ஊர்வலத்துக்கு அனுமதி பெற்றிருந்தால் அது செல்லும் இடம், நேரம் ஆகியவற்றை பின்னர் மாற்றக்கூடாது. அரசியல் தலைவர்கள், வேட்பாளர்களின் உருவ பொம்மைகளை எரிக்க கூடாது. அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்படும். பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளில் உள்ள அரசியல் கட்சிகளின் பெயர்கள், சின்னங்கள் மற்றும் கொடிகள் ஆகியவை மறைக்கப்படும். அனைத்து மாவட்டம் மற்றும் மாநில எல்லைகளில் நிலைக்குழுக்கள், பணியாற்றுவதற்கான சோதனைச்சாவடிகள் அமைக்கப்படும். அரசு கட்டிடங்கள் மற்றும் சுவர்களில் உள்ள அரசியல் கட்சியினர் தொடர்பான சின்னங்கள், வாசகங்கள் மறைக்கப்படும். அரசு மற்றும் தனியார்களுக்கு சொந்தமான கட்டிடங்களில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள் அழிக்கப்படும். அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள் அகற்றப்படும். தனி நபர்கள் துப்பாக்கிகள் வைத்திருந்தால், அதனை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். அரசின் புதிய நலத்திட்டங்களை தொடங்குதல் மற்றும் புதிய பயனாளிகள் தேர்வு செய்தல் நிறுத்தி வைக்கப்படும். மக்கள் குறைதீர்வு மனுக்கள் மற்றும் இதர மனுக்கள் பெறும் நிகழ்வுகள் தடை செய்யப்படும். ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும். வங்கிகள் மாலை, இரவு நேரங்களில் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது. பறக்கும் படை சோதனையின் போது குறிப்பிட்ட அளவு பணத்துக்கு மேல் ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும்.

தொடர்புடைய செய்தி