மேலப்பாளையம் அத்தியடி கீழத் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவர் கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி செய்த அலி பாத்து. இவர்களின் இரண்டாவது மகன் முகமது பைசல் 2018 -ம் ஆண்டு மேலப்பாளையம் கோல்டன் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்துள்ளார். அந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் வெறும் 71 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். 2வது முறையாக நீட் எழுதியுள்ளார் அதில் 325 மதிப்பெண் பெற்றார்.
பொது கோட்டாவில் மருத்துவராக சேர 600 மதிப்பெண்களுக்கு மேல் தேவை என்பதால் 3 -வது முறையாகவும் நீட் தேர்வு எழுதினார். அதில் 460மதிப்பெண்கள் தான் எடுக்க முடிந்தது மனம் தளராத முகமது பைசல் 4-வது முறையாக நீட் தேர்வு எழுதி 514 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்த மதிப்பெண்ணும் கை கொடுக்காததால் 5-வது முறையாக எழுதிய நீட் தேர்வில் 479 மதிப்பெண்கள் பெற்றார். மீண்டும் 6 -வது முறையாக நீட் தேர்வு எழுதியவர் 539 மதிப்பெண்கள் பெற்று BC முஸ்லீம் கோட்டாவில் 2 மார்க் வித்தியாசத்தில் டாக்டராகும் கனவை இழந்தார்.
இதனால் மனமுடைந்த முகமது பைசல் மீண்டும் தன்னுடைய பெற்றோர்கள் அளித்த உற்சாகத்தில் 7-வது முறையாக இந்த வருடம் நீட் தேர்வு எழுதினார். அதில் 720 க்கு 603 மதிப்பெண்கள் பெற்று டாக்டராகும் வாய்ப்பை பெற்றார். இந்த மாணவனை பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டினர்.