திருநெல்வேலி மாவட்டம் திருமலை கொழுந்துபுரத்தை சேர்ந்த மல்லிகா(52) என்பவரின் மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பழவூரை சேர்ந்த கோல்டா மேரி என்பவர் ரூபாய் 3 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை பெற்று கொண்டு பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி மல்லிகா என்பவர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசனிடம் புகார் அளித்தார்.
இவ்வழக்கினை மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அவர்கள் புலன் விசாரணை செய்ததில், மல்லிகா என்பவர் தவிர மேலும் 17 நபர்கள் மேற்கண்ட எதிரியிடம் பணத்தை கொடுத்து ஏமாற்றப்பட்ட விபரம் தெரிய வந்தது. மேலும் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து ஏமாற்றப்பட்ட மொத்த தொகை ரூபாய் 44 லட்சத்து 92 ஆயிரம் எனவும் தெரிய வந்தது.
மேலும் கோல்டா மேரி தவிர மேலும் இரண்டு நபர்கள் குற்றத்தில் ஈடுபட்டது தெரிய வந்து அவர்களை கைது செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வந்த நிலையில், இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து ஏமாற்றி அபகரிக்கப்பட்ட பணத்தில் இருந்து வாங்கப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து பெறப்பட்ட அசல் பாஸ் போர்ட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களிடம் நீதிமன்றத்தின் மூலம் ஒப்படைக்கப்பட்டது.