தஞ்சாவூரில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞரிடம் ரூ. 12 லட்சம் மோசடி செய்த நபரை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கண்டியர் தெருவைச் சேர்ந்தவர் டி. ஜெயக்குமார் (37). இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு முகநூலில் வந்த விளம்பரத்தைப் பார்த்தார்.
இதன் மூலம் மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த மதன் மீரான் (41), இவரது மனைவி ஜெசினாவை ஜெயக்குமார் தொடர்பு கொண்டார். அப்போது, கனடா நாட்டில் கப்பலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஜெயக்குமாரை நம்ப வைத்து, அவரிடம் மதன் மீரானும், ஜெசினாவும் ரூ. 12 லட்சம் கேட்டனர். இதைத்தொடர்ந்து, பல்வேறு தவணைகளில் மதன் மீரான், ஜெசினாவின் வங்கிக் கணக்குக்கு ஜெயக்குமார் ரூ. 12 லட்சம் அனுப்பினார். இதையடுத்து, ஜெயக்குமாருக்கு மதன் மீரானும், ஜெசினாவும் போலியான ஆவணங்களை அனுப்பி வைத்தனர்.
ஆனால், இருவரும் கூறியபடி ஜெயக்குமாருக்கு வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். இது குறித்து தஞ்சாவூர் மாவட்டக் காவல் அலுவலகத்தில் ஜூலை 31 ஆம் தேதி புகார் செய்தார். இந்த புகார் மனு மாவட்டக் குற்றப் பிரிவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதன் பேரில் மாவட்டக் குற்றப் பிரிவினர் வழக்குப் பதிந்து மதன் மீரானை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். தொடர்ந்து ஜெசினாவை தேடி வருகின்றனர்.