தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகில் உள்ள புனல்வாசல் பிளாங்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது43). கம்பி பிட்டர். இவருக்கு கனகவள்ளி என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
இரு தினங்களுக்கு முன் குழந்தைகளுடன் அருகில் உள்ள தாயார் வீட்டுக்கு கனகவள்ளி சென்று விட்டதாக கூறப்படுகிறது. வீட்டிலிருந்த கண்ணன் முன் பக்க கதவினை அடைத்து விட்டு டி. வி. பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
நேற்று அதிகாலை அவரது குடும்பத்தினர் கதவை தட்டி கண்ணனை எழுப்ப முயன்றுள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படாததை அறிந்து அங்கிருந்தவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். மேலும் கூரை வீட்டின் மற்றொரு இடத்தில் இருந்து உள்ளே பார்த்துள்ளனர். அப்போது டி. வி அருகில் இருந்த ஸ்விட்ச் போர்டு கழன்று விழுந்து அதிலிருந்து மின்சாரம் பாய்ந்த நிலையில் கண்ணன் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த கண்ணனின் மனைவி கனகவள்ளி கொடுத்த புகாரின் பேரில், திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.