தஞ்சாவூர் சாந்தபிள்ளை கேட் மேம்பாலம், கீழ் பாலம், பெரியகோயில் சாலை ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் உள்ளிட்ட அலுவலர்களுடன் ஆய்வு செய்தபின்னர் தஞ்சை எம்.பி முரசொலி, செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:
தஞ்சாவூர் சாந்தபிள்ளை கேட் மேம்பாலப் பகுதி மிகுந்த போக்குவரத்து நெரிசலாக உள்ளது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில், தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கோரிக்கை விடுத்தார். தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், இந்தப் பாலத்திலிருந்து ராமநாதன் ரவுண்டானா வரை எவ்வாறு செய்யலாம் என நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்து ஆலோசனை மேற்கொண்டோம்.
இந்தப் பாலம் தொடர்பான வடிவமைப்பு குறித்து பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்திடம் கொடுத்துள்ளோம். அவர்களிடமிருந்து பதில் வந்தபிறகு தொடர்புடைய அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும். கீழ் பாலத்தில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. இதில் தேங்கும் தண்ணீரை அருகிலுள்ள கல்லணைக் கால்வாயுடன் இணைக்க முடியுமா என்பது குறித்து மாநகராட்சி அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பெரியகோயில் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்லவும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது என்றார். அப்போது, தஞ்சை எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். ராமநாதன், உடனிருந்தனர்.