உயிரை காப்பாற்ற கோரி இளம்பெண் ஆட்சியரிடம் மனு

63பார்த்தது
உயிரை காப்பாற்ற கோரி இளம்பெண் ஆட்சியரிடம் மனு
பாப்பாநாடு பகுதியைச் சேர்ந்த 23 வயது நிரம்பிய பட்டதாரி இளம்பெண்ணை அப்பகுதியை சேர்ந்த 6 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்தனர். இது தொடர்பாக, இளம் பெண் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கவிதாசன் (25), திவாகர் (26), பிரவீன் (21), வேல்முருகன் (20), மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.  இதில், கவிதாசன், திவாகர், பிரவீன், வேல்முருகன் ஆகிய நான்கு பேரும் திருச்சி மத்தியச் சிறையிலும், இரண்டு சிறுவர்கள் தஞ்சாவூர் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், கவிதாசன், திவாகர், பிரவீன் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் உரிமை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன் தலைமையில், பாதிக்கப்பட்ட இளம்பெண், அவரது தந்தை ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள், கஞ்சா விற்பனை செய்தவர்கள்.

ஆறு பேரும் ஜாமீனில் வெளியே வந்தால், என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனால் ஆறு பேருக்கும் ஜாமீன் வழங்க கூடாது. மேலும், அவர்களை சிறையில் வைத்து புலன் விசாரணையை முடித்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை முடித்து தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.

தொடர்புடைய செய்தி