தண்ணீர் இன்றி கருகி வரும் இளம் சம்பா நெற்பயிர்களை காப்பதற்காக மோட்டார் மூலம் தண்ணீர் இறைக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் கூடுதல் செலவு ஆவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பொட்டுவாசாவடி ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் சம்பா பருவத்தில் நேரடி விதைப்பின் மூலம், முளை விட்டுள்ள இளம் நெற்பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் கல்லணை கால்வாய் ஆற்றில் இருந்து டீசல் மோட்டார்கள் மூலம் வயலுக்கு தண்ணீர் இறைத்து வருகின்றனர். டெல்டா பாசனத்திற்காக மேட்டூரில் இருந்து, ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. 16ஆம் தேதி கல்லணையிலிருந்து காவிரி வெண்ணாறு கல்லணை கால்வாய் ஆகிய ஆறுகளில் பாசனத்திற்காக தண்ணீர் பகிர்ந்து விடப்பட்டது டெல்டா மாவட்டங்களில் 5. 20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், போதிய அளவு தண்ணீர் இல்லாததால் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டன. எஞ்சிய நெற்பயிர்கள் முற்றிய நிலையில் தற்போது அறுவடை பணிகள் நடந்து வருகிறது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைந்ததால் தண்ணீர் திறக்கப்படும் அளவு குறைந்து விட்டது. இதன் காரணமாக கல்லணையில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால், நீரின்றி பொட்டுவாச்சாவடி பகுதி விவசாயிகள் கல்லணை கால்வாய் ஆற்றில் தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் மூலம் இறைத்து பயிர்களை காப்பாற்றி வருகின்றனர்.