சிவகங்கை: காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

50பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இளங்குடி ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் ரூ. 20 லட்சத்தில் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு 6 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான பெரியகருப்பன் திறப்பு விழாவை புறக்கணித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் வேறு வழியின்றி இளங்குடி ஊராட்சி தலைவர் ஜோசப் இன்று கட்டடத்தை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் முன்னிலையில் திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை ஜோசப் தூங்கிக்கொண்டிருந்த போது நாச்சியாபுரம் போலீசார் 2022ல் நில பிரச்சனை தொடர்பான பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றை காரணம் காட்டி கைது செய்தனர். இத்தகவலை அறிந்த கிராம மக்கள் இன்று காலை மழையையும் பொருட்படுத்தாமல் நாச்சியாபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, ஊராட்சி தலைவர் ஜோசப்பை விடுவிக்க கோரி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கிராம மக்களே புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்து குத்துவிளக்கு ஏற்றி பால் காய்ச்சி பொங்கல் வைத்து ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தில் திறப்பு விழா நடத்தினர்.

தொடர்புடைய செய்தி