சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேருந்து நிலையத்தில் டங்ஸ்டன் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளை பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில குழு உறுப்பினர் பொன்னுத்தாய் தலைமையில் ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன்னுத்தாய், டங்ஸ்டன் திட்டத்திற்கு மதுரை மாவட்டத்தில் மேலூர், திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி பகுதிகளில் சுமார் 38 லட்சம் ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளதாகவும். இங்கு பழங்கால சமணப் படுகைகள், குடைவரைக் குகைகள், அழகர் கோயில் என தமிழ் பண்பாட்டு கலாச்சார சின்னமாக விளங்கும் பகுதிகள் பாதிப்படையும், 52 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அப்புறப்படுத்தப்படுவதுடன், நீர்நிலைகள் காற்று மாசு ஏற்பட்டு மக்கள் வாழ்வாதாரம் இழந்து பல உயிர்க்கொல்லி நோய்க்கு பலியாக ஏற்படும் என எச்சரிக்கை விடுத்தார். இன்று அரிட்டாபட்டியில் நிலத்தை கையகப்படுத்தப்படுவதாகவும் நாளை சிங்கம்புணரி பகுதிகளும் இந்த நிலை ஏற்படும் 60 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் புற்றுநோய், கருசிதைவு, ஊனக் குழந்தைகள் என பலரும் நோய்களுக்கு ஆளாக நேரிடும் என பொன்னுத்தாய் தெரிவித்தார்.