சிவகங்கை அரசு மகளீர் கலைக்கல்லூரியில் சிவகங்கை, மானாமதுரை, காளையார்கோவில், புளியடிதம்பம், மறவமங்களம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 2500 மாணவிகள் பயின்று வருகின்றனர். இரண்டு சிப்ட்களாக நடைபெறும் வகுப்புகளுக்கு மாணவிகள் தனி, தனியாக வந்து செல்லும் நிலையில் கல்லூரியானது பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி. மீ தூரம் தள்ளி உள்ளதால் வெளியூரிலிருந்து வரும் மாணவிகள் கால்நடையாகவோ அல்லது சேர் ஆட்டோக்கள் மூலமாகவோதான் கல்லூரிக்கு செல்ல வேண்டியுள்ளது.
குறிப்பாக ஏழை எளிய மாணவிகள் பெரும்பாலும் கால்நடையாகவே கல்லூரிக்கு சென்றுவருகின்றனர். கல்லூரிக்கு செல்வதற்கு 3 கி. மீ திரும்ப பேருந்து நிலையம் வர 3 கி. மீ தூரம் என நாள் ஒன்றிற்கு சுமார் 6 கி. மீ தூரம் நடந்து சென்று வருவதுடன் வீட்டிற்கு திரும்ப இரவு 8 அல்லது 9 மணி ஆகிவிடுவதால் வீட்டுப்பாடங்களை சரிவர செய்ய முடியாமலும், உடல்சோர்வும் ஏற்படுகிறது. மேலும் மழை காலங்களிலிம், வெயில் காலங்களிலும் நடந்தே செல்வதால் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். எனவே பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரி வேலைகளில் அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கினால் பேருதவியாக இருக்கும் என மாணவிகள் தரப்பில் பலமுறை கோரிக்கைவிடுத்துள்ளனர். அதனைதொடர்ந்து எம். எல். ஏ செந்தில்நாதன் போக்குவரத்து துறைக்கு கோரிக்கைவிடுத்து ஆட்சியர் ஆஷா அஜித்தை நேற்று(செப்.3) சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தார்.