சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் பெருந்திரள் முறையீடு மனு அளித்தனர்.
மாநில மைய முடிவின்படி தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் சிவகங்கையில் நடைபெற்ற பெருந்திரள் முறையீடு மனு அளிக்கும் நிகழ்வு, மாவட்டச் செயலர் பிரசன்னா பிரியா தலைமையில் நடைபெற்றது.
கோரிக்கைகள்: தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல் எம். ஆர். பி. தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் உட்பட அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள சுமார் 1500 செவிலியர் பணியிடங்களை எம். ஆர். பி தொகுப்பூதிய செவிலியர்களைக் கொண்டு உடனடியாக நிரப்ப வேண்டும்.
கரோனா காலகட்டத்தில் இரண்டரை வருடங்கள் பணிபுரிந்து பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தர பணியிடங்கள் உருவாக்கிட வேண்டும். செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்புக்கான ஊதியத்தை வழங்கிட வேண்டும்.
என்எச்எம் திட்டத்தின் கீழ் பணிபுரியும் செவிலியர்களுக்கு நாட்டின் பல மாநிலங்களில் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அது போன்று தமிழ்நாட்டில் பணி செய்யும் செவிலியர்களுக்கும் நியாயமான ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 கோரிக்கைகள் இந்த பெருந்திரள் முறையீட்டில் வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.