பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 32 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் 58 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோரிக்கைகள்: நியாயவிலைக்கடைப்பணியாளர்கள் அனைவருக்கும் 30% போனஸ் வழங்க வேண்டும். கடைகளுக்கு சரியான எடையில் தரமான பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும். கல்வித்தகுதி அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தில் 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி ஓய்வு பெறும் நியாயவிலைக்கடை ஓய்வூதியம் மறுக்கப்படுகிறது. ஒரு சிலருக்கு கருணை ஓய்வூதியமாக ரூ. 1000 -ம் மட்டும் வழங்கப்படுகிறது. பலருக்கு அதுவும் கிடைக்கவில்லை. ஆகவே ஊழியரின் கடைசிமாத ஊதியத்தில் சரிபாதியை ஓய்வூதியமாக வழங்க வேண்டும். பொதுமக்களின் கருத்தைக்கேட்டு பொருள்களை வழங்க வேண்டும். எப்பிஎஸ் செயலி மூலம் ஆய்வு செய்வதைக் கைவிட வேண்டும். கட்டுப்பாடற்ற பொருள்களை கட்டுப்பாடு இல்லாமல் இறக்குவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 32 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, சங்க மாநில பொதுச்செயலர் கே. ஆர். விஸ்வநாதன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 58 பேர் கை செய்யப்பட்டுள்ளனர்.