திருப்புவனம்: கிடுகிடுவென விலை உயர்ந்த ஆடு, கோழி

71பார்த்தது
திருப்புவனத்தில் வாரம்தோறும் செவ்வாய்கிழமை கால்நடை சந்தையும் அதன்பின் காய்கறி சந்தையும் நடைபெறும். திருப்புவனம் வட்டாரத்தில் கொந்தகை, கீழடி, மணல்மேடு, பெத்தானேந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளாடு, செம்மறியாடு, கோழி, சேவல் அதிகளவில் வளர்க்கப்படுகிறது. 

விவசாயிகள் வாரச்சந்தையில் தாங்கள் வளர்க்கும் ஆடு, கோழி, சேவல் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்செல்வார்கள். திருப்புவனம் சந்தையில் தீபாவளி, ஆடி, சிவராத்திரி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட தினங்களில் கால்நடைகள் அதிகளவில் விற்பனையாகும். விலையும் அதிகரித்து காணப்படும். 

சாதாரண நாட்களில் 500 கால்நடைகள் விற்பனையாகும் நிலையில் விசேச நாட்களில் இது நான்கு மடங்கு வரை உயரும். இதனை நம்பி தமிழகம் முழுவதிலும் இருந்தும் வியாபாரிகள் ஆடு, கோழி வாங்க குவிவது வழக்கம். 

ரம்ஜான் திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்றைய சந்தையில் அதிகளவு ஆடு, கோழி, சேவல் விற்பனையாகின. 10 கிலோ எடை கொண்ட வெள்ளாடு 7 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரம் ரூபாய் வரையிலும், 20 கிலோ எடை கொண்ட கிடா 18 ஆயிரத்தில் இருந்து 21 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனையாகின. 

5 கிலோ எடை கொண்ட ஒரு ஜோடி சேவல் ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ரம்ஜானுக்கு கிடா, சேவல்தான் அதிகளவு பலியிடப்படும். சந்தையில் இதனால் கிடா, சேவலின் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி