சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள கீழப்பசளை, மேலப்பசளை, சங்கமங்களம், ஆதனூர் உட்பட 4 கிராமங்கள் அமைந்துள்ளன.
இந்த கிராமங்களில் சுமார் 15, 000 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்து வருகின்றனர். குறிப்பாக இந்த கிராமத்திற்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் மானாமதுரையின் முக்கிய நகர் பகுதி வழியாக செல்கிறது. இந்நிலையில் கால்வாய் ஓரமாக ஆக்கிரமித்து வீடுகள் அதிகமாக கட்டப்பட்டுள்ளது.
இந்த வீடுகளில் எந்த ஒரு வீடுகளிலும் செப்டிக் டேங்க் கிடையாது. இதனால் கால்வாய்க்குள் கழிவுநீர் ஏற்கனவே நேரடியாக கலந்து வருகிறது. இதனால் விவசாயமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று (செப் 20) கால்வாயை சேதப்படுத்தி கால்வாய் மணலை தோண்டி தண்ணீர் செல்லும் பாதையை அடைத்துவிட்டு தனியார் நில ஆய்வாளர்களை அழைத்து வந்து இடத்தை அளந்து கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
நிலத்தை அளப்பது குறித்து கிராம விவசாயிகளிடமும் பொதுப்பணி துறையினரிடமும் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த நான்கு கிராம விவசாயிகளும் சுற்றுச்சுவர் கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.