ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த இளம்பெண் ஜோடி மோரீ (31), தனது சகோதரி, தாயாருடன் வசித்து வரும் இவர் கல்லூரி படிப்பு முடித்து விட்டு இசை மற்றும் யோகா ஆசிரியையாக பணிபுரிகிறார். ஆதிசங்கரர் பற்றிய நூல்களை படித்த இவர் அவருடைய அறிவுரைகளை பின்பற்ற தொடங்கியுள்ளார்.
ஆதிசங்கரர் வாழ்ந்த, தோன்றிய இடங்களை காண வேண்டும் என்பதற்காக சகோதரி, தாயார் ஆதரவுடன் கடந்தாண்டு நவம்பர் 15ம் தேதி இந்திய வந்த அவர் ஒடிசா வில் உள்ள பூரி நகரில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், மதுரை மீனாட்சியம்மன் உள்ளிட்ட இடங்களில் சுமார் மூன்று மாதங்களாக பாத்தியாத்திரை சென்று தரிசனம் முடித்த உடன் கேரளா சென்று ஆதிசங்கரர் பிறந்த இடமான காலடி சென்று இறுதியாக பத்ரிநாத்தில் பாதயாத்திரையை நிறைவு செய்கிறார்.
இதற்காக ராமேஸ்வரத்தில் தரிசனம் முடித்து விட்டு மதுரை நான்கு வழிச்சாலை வழியாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திற்கு வருகை தந்தார். தமிழகத்தில் ராமேஸ்வரம், மதுரை, காஞ்சி சங்கரமடம் ஆகிய வற்றை காண்பது அவருடைய கனவு என்கிறார்.
தனது உடல் முழுவதும் இசை சம்பந்தமான குறிப்புகள், பறவைகள், தாவரங்கள், ஆதிசங்கரர் படங்களை டாட்டூவாக வரைந்துள்ளார். தினசரி 20 முதல் 40 கி. மீ தூரம் வரை நடந்து செல்கிறார். சுமார் ஆறாயிரத்து 500 கி. மீ தூரம் பாதயாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்.