சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்ட அரசு மேல்நிலைப்பள்ளி

602பார்த்தது
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியத்துக்குள்பட்ட மல்லல் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியை பார்க்கும் போது அப்பள்ளியின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது.

இங்கு, மாணவர்களுக்கான குடிநீர், கழிப்பறை வசதி, சுற்றுச்சுவர், மைதானம், பள்ளி வகுப்பறை பற்றாக்குறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் பாழடைந்து கிடக்கிறது. மேலும் சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தால் இப்பள்ளி வகுப்பறை வெளிச்சுவர்களில் பல்வேறு கிறுக்கல்கள் நிறைந்து காணப்படுகின்றன.

இப்பள்ளியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பெரியக்கண்ணனூர், செம்பனூர், பாவாக்குடி, சாத்தரசன்கோட்டை, மேலக்கடம்பக்குடி, மருதங்குடி, சித்தாலங்குடி, மேலப்பிடாவூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்ததாகவும், ஆனால், போதிய பேருந்து வசதி மற்றும் பள்ளியில் கூடுதல் வகுப்பறை, விடுதி வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் மாணவர் சேர்க்கை குறைந்து போனதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளை பெரு நிறுவனங்களோ அல்லது பொதுத்துறை வங்கிகளோ தத்து எடுத்து மேம்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தொடர்புடைய செய்தி