சிவகங்கையில் முதல்வர் அறிவித்த பெண் காவலர் பயிற்சி கல்லூரியை தாமதமின்றி தொடங்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம். பி. தமிழக உள் துறை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரிக்கு 2022 ஜூன் 8-ம் தேதி வந்தபோது கார்த்தி சிதம்பரம் எம். பி. கோரிக்கையை ஏற்று சிவகங்கையில் வேலுநாச்சியார் பெயரில் பெண் காவலர் பயிற்சி கல்லூரி தொடங்கப்படும் என முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார்.
ஆனால், இதுவரை கல்லூரி தொடங்காததால் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி தமிழக உள்துறை செயலருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: முதல்வர் அறிவித்த பின்னர் 2022 நவ. 3-ம் தேதி உள்துறை செயலர், டிஐஜி பெண் காவலர் பயிற்சிக் கல்லூரியை தொடங்குவது தொடர்பான கருத்துரு கோரினர். ஆனால், தொடர்ந்து கல்லூரியை தொடங்க வலியுறுத்தி 2023 பிப். 3, ஏப். 3, ஆக. 28 ஆகிய தேதிகளில் நினைவூட்டல் கடிதம் எழுதினேன். ஆனால், இதுவரை கல்லூரி தொடங்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. எனது கோரிக்கையின் மீது சிறப்புக் கவனம் செலுத்தி விரைவில் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.