"ஏழைகளின் ஊட்டி" என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு இன்று
காலை முதலே சுற்றுலா பயணிகளின் கூட்டம், கூட்டமாக படையெடுக்க தொடங்கி உள்ளனர். தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக ஏற்காட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். தற்போது தமிழத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதால் ஏராளமான பேர் குடும்பம், குடும்பமாக ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்த
வண்ணம் உள்ளனர். ஏற்காட்டில் ஆட்டம் பாட்டம் என உற்சாகமாக புத்தாண்டை வரவேற்று கொண்டாடுகிறார்கள். இதையொட்டி இளைஞர்கள், சுற்றுலா பயணிகள் விடுதிகளை முன்பதிவு செய்துள்ளதால், அங்குள்ள தங்கும் விடுதிகள் குறிப்பாக லாட்ஜ்களில் உள்ள அறைகள் நிரம்பி வழிகிறது. ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்ததால் திருவிழா போல் காட்சியளிக்கிறது. அங்குள்ள பூங்காக்கள்,
ஏரி, நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. இதற்காக முன்கூட்டியே திட்டம் தீட்டி பஸ்கள், மோட்டார்சைக்கிள், கார்
உள்ளிட்ட வாகனங்களில் சாரை, சாரையாக ஏற்காட்டிற்கு வருகின்றனர்.
புத்தாண்டை விமரிசையாக கொண்டாட ஏற்காட்டில் குவிந்து வருகின்றனர்.