சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று(அக்.04) மாலை ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் ராஜேந்திரன் கூறியதாவது: -
சுற்றுலாத்துறையில் மகத்தான சாதனை நிகழ்த்த வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
அவரது ஆலோசனையின்படி தமிழ்நாட்டில் உள்ள 300 சுற்றுலாத் தலங்களில் சர்வதேச தரத்திற்கு இணையான வசதிகளை ஏற்படுத்த சுற்றுலா பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, ஏற்காடு கோடை விழா ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், 2023-2024-ம் ஆண்டின் சட்டமன்ற மானியக் கோரிக்கையின் அறிவிப்பின்படி, ஏற்காடு சுற்றுலாத்தலத்தில் நிலச்சீரமைப்பு, காட்சிமுனை, உட்கட்டமைப்பு மற்றும் பிற சுற்றுலா வசதிகளை மேம்படுத்திடும் வகையில் ரூ. 9. 71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சுற்றுலாத்துறையால் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி, ஏற்காடு பக்கோடா காட்சிமுனை பகுதியில் ரூ. 1. 42 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், கிளியூர் நீர்வீழ்ச்சியில் ரூ. 78. 61 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகளும் ரூ. 2. 54 கோடி மதிப்பீட்டில் அண்ணா பூங்கா அழகுபடுத்தும் பணி என பல்வேறு பணிகள் விரைவில் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.