
இளம்பிள்ளை: இரவில் தறித்தொழிலாளி அடித்துக்கொலை
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி (வயது 30). தொழிலாளி. இவரது மனைவி கவுசல்யா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சிவமூர்த்திக்கும், அவரது தம்பி கவுதமுக்கும் இடையே குடும்பப் பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 3) இரவு 9 மணியளவில் அண்ணன், தம்பி இருவரும் தங்களது வீட்டின் அருகே நின்றுகொண்டு தகராறு செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கவுதம், தனது அண்ணனை விறகு கட்டையால் சரமாரியாக அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சிவமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அண்ணனைக் கொலை செய்ததை அறிந்த கவுதம் அங்கிருந்து தப்பிச்சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் கொலையுண்ட சிவமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குடும்பப் பிரச்சினையில் சிவமூர்த்தி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பயங்கர கொலை அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.