சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் தொடர்பாக அனைத்து கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று(நவம்பர் 17) நடந்தது. கூட்டத்திற்கு சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளரும் ஊரக வளர்ச்சித் துறை ஆணையாளருமான ஆனந்தகுமார் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மூலம் பெறப்பட்ட படிவங்கள், களப்பணி, சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான படிவங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் சிறப்பு சுருக்க முறை திருத்தத்தில் தரப்பட்ட படிவங்களை இறுதி செய்து சரியான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம் நடந்து வரும் சேலம் மஜிரா கொல்லப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆனந்தகுமார் ஆய்வு செய்தார். இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ரஞ்சித் சிங், டிஆர்ஓ மேனகா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.