சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 47 வது டிவிஷன் ஆண்டிபட்டி ஏரி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர். முறையான குடிநீர் வழங்க வேண்டியும், கூடுதலாக குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டியும் கோரிக்கை விடுத்து மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து மனு ஒன்றை வழங்கினர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும் போது சேலம் குகை 47 வது வார்டு ஆண்டிபட்டி ஏரி ஹவுசிங் போர்டு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 450 குடும்பங்கள் வசித்து வந்தனர். அப்போது மாநகராட்சி சார்பில் குடிநீர் வழங்க ஒரு குழாய் அமைக்கப்பட்டது ஆனால் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
ஆனால் இன்னும் ஒரே ஒரு குடிநீர் குழாய் மூலம் ஆயிரம் குடும்பங்கள் சேர்ந்தவர்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதியுற்று வருகின்றோம். ஏற்கனவே மாநகராட்சி சார்பில் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது இந் நிலையில் ஒரு குடிநீர் குழாய் இருப்பதால் அனைவராலும் தண்ணீர் பிடிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் குடிக்க தண்ணீர் இல்லாமல் அவதியடைந்து வருவதாக கூறினர். மாநகராட்சி நிர்வாகம் மேலும் ஒரு குடிநீர் குழாய் அமைத்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.