வெல்லம்: கலப்படம் செய்ய வைத்திருந்த 56 டன் சர்க்கரை பறிமுதல்

67பார்த்தது
வெல்லம்: கலப்படம் செய்ய வைத்திருந்த 56 டன் சர்க்கரை பறிமுதல்
சேலம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு ஆலைகளில் வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அவ்வாறு தயாரிக்கப்படும் சில ஆலைகளில் வெல்லத்தில் சர்க்கரையை கலப்படம் செய்வதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி மற்றும் அதிகாரிகள் நேற்று ஓமலூர் அருகே காமலாபுரம் பகுதிகளில் உள்ள கரும்பு ஆலைகளில் திடீரென ஆய்வு செய்தனர்.
அப்போது, எல்லப்புளியில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான கரும்பு ஆலையில் ஆய்வு செய்தபோது, அங்கு ரூ. 1 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் 63 மூட்டைகளில் வெள்ளை சர்க்கரை இருந்ததும், அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், அந்த ஆலையில் ஒரு டன் 80 கிலோ கலப்பட வெல்லமும் பறிமுதல் செய்யப்பட்டது.
அங்குள்ள ஒரு கடையில் ஆய்வு செய்யப்பட்டு, அங்கு இருந்த ரூ. 16 லட்சம் மதிப்பிலான 800 சர்க்கரை மூட்டைகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், மற்றொரு நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து, அங்கு வைத்திருந்த 250 சர்க்கரை மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். மொத்தம், 3 இடங்களில் நடந்த ஆய்வில் கலப்படம் செய்ய வைத்திருந்த 56 டன் வெள்ளை சர்க்கரை மற்றும் ஒரு டன் 80 கிலோ கலப்பட வெல்லம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி