தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் சேலம் மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமையில் நிர்வாகிகள் நேற்று (டிசம்பர் 1) மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்த அமைச்சர் ராஜேந்திரன், கலெக்டர் பிருந்தாதேவி ஆகியோரை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சுப்பிரமணி நிருபர்களிடம் கூறியதாவது: - சேலம் மாவட்டம் மட்டுமின்றி கொங்கு மண்டலத்தில் உள்ள 6 மாவட்டங்களில் குவாரி உரிமையாளர்கள் கட்டுமான பணிக்கு தேவையான கிரஷர் ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலையை திடீரென தன்னிச்சையாக 40 சதவீதம் வரை உயர்த்தியுள்ளனர். இதனால் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்களும், வீடுகளை கட்டி வரும் பொதுமக்களும் பணிகளை தொடர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் தன்னிச்சையாக சிண்டிகேட் அமைத்து விலை ஏற்றியது மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஜல்லி விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என அமைச்சரிடமும், மாவட்ட கலெக்டரிடமும் வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விலை உயர்வை கட்டுப்படுத்த தவறினால் சேலம் உள்பட 6 மாவட்டங்களில் உள்ள ஒப்பந்ததாரர்கள் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.