சேலம் ரயில் நிலையத்தில் 5. 5. கிலோ கஞ்சாவை கடத்திய வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஒடிசா, ஆந்திராவில் இருந்து சேலம் வழியே கேரளா செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படை, சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த வகையில் நேற்று முன்தினம் மாலை சேலம் ரயில்வே போலீசாருடன் இணைந்து போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சேலம்ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ரயில் நிலையத்தில் சந்தேகப்படும் படி சென்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் கஞ்சா கடத்தி சென்றது தெரிந்தது. அவரிடமிருந்து 5. 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் விசாரித்தனர். அதில், அவர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த வடிவேல்(25) என்பதும், கேரளா சென்ற பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒருவர் கடத்தி வந்த கஞ்சாவை வாங்கிக் கொண்டு திண்டுக்கல்லுக்கு சப்ளை செய்ய சென்றதும் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். ரயிலில் கஞ்சா கடத்திய மர்மநபர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.