சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள சாலையோரத்தில் நேற்று (அக்.,3) மாலை 16 வயதுடைய மாணவி ஒருவர் மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அந்த மாணவியின் பெற்றோர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் மகளை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இதனிடையே அந்த மாணவியை சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல் பரவியது. அதைத்தொடர்ந்து போலீஸ் உதவி கமிஷனர் அஸ்வினி, இன்ஸ்பெக்டர்கள் காந்திமதி, செல்வி ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த மாணவி சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்ததும், மது போதையில் அவர் மயங்கி கிடந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து மயக்க நிலையில் மாணவி இருந்ததால் அவரிடம் விசாரிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, மது போதையில் இருந்த பிளஸ்-1 மாணவியை 2 பேர் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து அழகாபுரம் பகுதியில் விட்டுவிட்டு சென்றுள்ளனர். அவர்கள் யார்? என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. டாக்டர்கள் பரிசோதனையில் அந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.