சேலம் பள்ளப்பட்டி போலீசார் புதிய பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு சிறிய சாக்கு மூட்டையுடன் சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் வைத்திருந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் சந்தன கட்டைகள் இருப்பது தெரிய வந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனச்சரகர் துரைமுருகன் தலைமையில் வனவர் சுரேஷ், வனக்காப்பாளர்கள் அசோக்குமார், அருண்குமார், ஹரிபிரசாத் ஆகியோர் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் சந்தனக்கட்டையுடன் பிடிபட்டவரை வன அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலை புதூரை சேர்ந்த தொழிலாளி, சுப்பிரமணி (வயது 46) என்பது தெரிந்தது. மேலும் அவர் மலைப்பகுதிகளில் சந்தன கட்டைகளை வெட்டி கடத்தி விற்பனை செய்ய கொண்டு வந்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து 7 கிலோ சந்தன கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் சந்தன கட்டைகளை விற்க முயன்ற சுப்பிரமணிக்கு ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் கஷயப் சசாங் ரவி உத்தரவிட்டார்.