அரசுஆஸ்பத்திரியில் ஆங்கில புத்தாண்டு புதுவரவாக 23 குழந்தைகள்

1108பார்த்தது
அரசுஆஸ்பத்திரியில் ஆங்கில புத்தாண்டு புதுவரவாக 23 குழந்தைகள்
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் பலர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மகப்பேறு பிரிவில் ஏராளமான கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இங்கு தினமும் 30 முதல் 35 குழந்தைகள் பிறக்கின்றன.
இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டு நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இந்த புத்தாண்டில் மட்டும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு பிரிவில் புத்தாண்டு அன்று புதுவரவாக 23 குழந்தைகள் பிறந்துள்ளன. அவற்றில் 11 ஆண் குழந்தை, 12 பெண் குழந்தை ஆகும். இதில் 9 சுகப்பிரசவமும், 14 அறுவை சிகிச்சை மூலமும் குழந்தைகள் பிறந்தது என்று மகப்பேறு பிரிவுத்துறை தலைவர் சுபா தெரிவித்தார். மேலும் அவர் கடந்த ஆண்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 11 ஆயிரத்து 16 குழந்தைகள் பிறந்துள்ளன என்றார்.

புத்தாண்டு தினத்தில் குழந்தைகள் பிறந்ததால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் செவிலியர், டாக்டர் உள்ளிட்டவர்களுக்கு சாக்லெட், கேக் கொடுத்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதுடன் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி