சேலம் வழியாக சந்தன மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு கடந்த 3-ந் தேதி தகவல் கிடைத்தது. அதன்பேரில சேலம் வனச்சரகர் துரைமுருகன் மற்றும் வனத்துறையினர் ஈரோடு-சேலம் நெடுஞ்சாலையில் மகுடஞ்சாவடி சாலை பகுதியில் வாகனங்களை சோதனை நடத்தினர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, 86 உரச்சாக்குகளில் துண்டு, துண்டுகளாக வெட்டப்பட்ட சந்தன மரக்கட்டைகள் கடத்தி வரப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து அந்த வாகனத்தை ஓட்டி வந்த டிரைவரான கேரள மாநிலத்தை சேர்ந்த சுகைல் (வயது 34), வாகன உதவியாளர் முகமது பசிலு ரகுமான் (26) ஆகியோரை சம்பவ இடத்திலேயே வனத்துறையினர் கைது செய்தனர். இதைபார்த்த அவர்களுடன் வந்தவர்கள் மற்றொரு காரில் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இதையடுத்து சரக்கு வாகனத்துடன் சேர்த்து, சாக்கு பைகளில் இருந்த சுமார் 1½ டன் சந்தனமரங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தொடர் விசாரணையில், செல்போன் டவர் மூலம் தப்பிச்சென்ற கும்பல் ஈரோடு மாவட்டம் பவானியில் தங்கி இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து தனிப்படையினர் அங்கு விரைந்து சென்றனர். அந்த ஓட்டலில் தங்கி இருந்த, சந்தன மரக்கட்டைகள் கடத்தல் கும்பலான கேரள மாநிலத்தை சேர்ந்த முகமது மிசைல், முகமது அப்ரார், பஜாஸ், உம்மர் ஆகியோரை கைது செய்ததுடன், அவர்கள் தப்பிச்சென்ற காரையும் பறிமுதல் செய்தனர்.